தேசிய செய்திகள்

டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

இன்று டெல்லி வந்த முதல் அமைச்சர் விஜய், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார்.

முதல்-அமைச்சர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி முதல்முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் 2-வது முறையாக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலையில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்.டெல்லியில் நாளை (11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.

நிதி ஆயோக் கூட்டம்

அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டு பேசும் இந்த கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தி பேச உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். கூட்டம் முடிந்ததும் அங்கேயே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோரையும் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி

இதற்கிடையே,இன்று டெல்லி வந்த முதல் அமைச்சர் விஜய், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்த விஜய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவையும் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.