புதுடெல்லி,
டெல்லியில் நாளை(11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற அவர், காவல்துறை வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். மரியதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை முதல்-அமைச்சர் விஜய் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியை மட்டும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார். அந்த வகையில், தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று ஜனாதிபதியை விஜய் சந்தித்துள்ளார். தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.