தேசிய செய்திகள்

தாய்மொழி மூலமே இந்தியாவை குழந்தைகள் புரிந்துகொள்ள முடியும்: அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் இந்திய மொழிகளில் பேசுவது பெருமை அளிக்கிறது. |

மும்பை:

இந்தியாவின் பன்மொழி தன்மையை பாதுகாப்பதுடன், அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தினார். மும்பையில் நடைபெற்ற 6-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- ஒரு குழந்தை தனது தாய்மொழியின் மூலமாகவே தனது தாய், மண், வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியும். தாய்மொழி என்பது வெறும் தகவல் தொடர்புக்கான கருவி அல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவுகளையும், அடையாளத்தையும் தாங்கி நிற்கிறது.எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் தாய்மொழியிலேயே பேச வேண்டும். ஒருவர் தனது சொந்த மொழியை பேசினால் தாழ்வாக கருதப்படும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.இளைஞர்கள் உலகின் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தங்களது தாய்மொழியை ஒருபோதும் கைவிடக்கூடாது.

இந்தியாவின் மொழி பன்முகத்தன்மை நமது மிகப்பெரிய பலமாகும். ஒவ்வொரு இந்திய மொழிக்கும் தனித்துவமான வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. இந்த மொழிகள் அனைத்தும் இணைந்தே இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன. இந்தி மற்ற இந்திய மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல. பல்வேறு மொழிகளை பேசும் மக்களிடையே தொடர்பை ஏற்படுத்தும் பாலமாக இந்தி செயல்படுகிறது. எனவே, இந்திய மொழிகளின் வளர்ச்சியுடன் இந்தியும் வளர வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் இந்திய மொழிகளில் பேசுவது பெருமை அளிக்கிறது. இதன் மூலம் இந்திய மொழிகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது. தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளும் இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. போட்டித்தேர்வுகளும் பல்வேறு இந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன.தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்திய மொழிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பங்கள் மூலம் மொழிகளுக்கு இடையேயான தடைகளை குறைக்க முடியும்.இவ்வாறு அமித்ஷா கூறினார்.

SCROLL FOR NEXT