தேசிய செய்திகள்

சென்னை, மும்பையில் ரூ.35 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்; 12 பேர் கைது

அந்த கண்டெய்னர்களில் 46,000 பட்டாசுகளும் வாணவெடிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

புது டெல்லி,

சென்னை துறைமுகம் வழியாக சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் வெடிகளை இந்தியாவுக்குள் கடத்த நடைபெற்ற இரண்டு முயற்சிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கண்டுபிடித்துள்ளது.

அதிகாரிகள் சோதனை

சீனாவிலிருந்து வந்த இரண்டு 40 அடி கன்டெய்னர்களை டிஆர்ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர், அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவற்றில் சுமார் 46,000 பட்டாசுகளும் வாணவெடிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

2 பேர் கைது

டிஆர்ஐ அமைப்பிற்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில், 18.7 மெட்ரிக் டன் சீன தயாரிப்பு பட்டாசுகளை ரகசியமாக கடத்திய ஒரு கும்பலை சென்னை சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கன்டெய்னர் சரக்கு நிலைய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 பேர் கைது

முன்னதாக, 2026 மே மாதம் முதல், மும்பையில் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, சுமார் 100 மெட்ரிக் டன் சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பையில் டிஆர்ஐ பதிவு செய்த வழக்கில், கடத்தலுக்கு உதவியதற்கும், சரக்குகளை மாற்ற முயற்சித்ததற்கும், கன்டெய்னர் சரக்கு நிலைய ஊழியர்களின் தீவிர ஈடுபாடும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில், சிஎப்எஸ்-ன் (CFS) நான்கு ஊழியர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சமீபத்திய பறிமுதலுடன், இந்த நடவடிக்கைகளின் விளைவாக மொத்தம் சுமார் ரூ. 35 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.