தேசிய செய்திகள்

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்கின் வருகை இந்தியா-சீனா உறவில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

பெய்ஜிங்,

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா வருகை

மேற்கு ஆசிய மோதல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட நிலையற்ற உலகச் சூழலுக்கு மத்தியில், ஆசியாவின் இரு முக்கிய சக்திகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பிலும் சீன அதிபரின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவார் என்று சீன அரசுக்கு சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு

செல்வாக்கு மிக்க இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள இந்தியா, 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடத்தவுள்ளது.

இது ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஜி ஜின் பிங் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாகும். இது இந்தியா-சீனா உறவில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற முறைசாரா உச்சிமாநாட்டிற்காக ஜி ஜின் பிங் கடைசியாக 2019-ல் இந்தியா வந்திருந்தார்.

அதற்கு முன்னதாக, 2016-ல் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க அவர் வந்திருந்தார்; 2014 செப்டம்பரில் அவர் மேற்கொண்ட முதல் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அந்த 2014-ம் ஆண்டு பயணம், இரு தலைவர்களின் பதவிக்காலத்தின் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகும். பின்னர், கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க 2016-லும் அவர் இந்தியா வந்திருந்தார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் யார், யார்..?

சீன அதிபர் ஜி ஜின்பிங்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா

ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான்

எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது

இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ

ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்

பிரேசில் வெளியுறவுத் தலைவர் மௌரோ வியெய்ரா

இன்னும் பல நாடுகளிலிருந்து தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT