தேசிய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது தாக்குதல்

போராட்ட இடத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் பாதுகாப்பு படை வீரர் பிக்ரம் குமார் ஈடுபட்டிருந்தார்.

புதுடெல்லி,

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரரை போராட்டக்காரர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் வீரரின் வலது முழங்கையில் லேசான காயம் ஏற்பட்டது.

டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் (NSUI) சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை முன்வைத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

பாதுகாப்பு படை வீரர் மீது தாக்குதல்

போராட்ட இடத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் பாதுகாப்பு படை வீரர் பிக்ரம் குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது தடுப்புகள் அருகே இருந்த போராட்டக்காரர் ஒருவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் திடீரென கத்தியால் வீரரை சரமாறியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிக்ரம் குமார் கூறுகையில், தாக்கியவர் தனது கழுத்தை குறிவைத்து கத்தியால் வெட்ட முயன்றதாகவும், தான் விலகியதால் கத்தி கையில்பட்டதாகவும் தெரிவித்தார்.

காயமடைந்த பிக்ரம் குமாரை போலீசார் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயம் லேசானது என்பதால் சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் வீடு திரும்பினார்.

சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு

சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஜந்தர் மந்தர் பகுதியில் தேர்தல் முறைகேடு தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் மீது கத்திக்குத்து முயற்சி நடந்தது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT