தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய அபிஜீத் தீப்கே

நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு சிஜேபி கட்சியினர் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே டெல்லியில் நேரில் சந்தித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாக இருந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அதற்கு மாற்று இடங்களையும் டெல்லி காவல்துறை அண்மையில் அறிவித்தது.

இந்தத் தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சவுரவ், அசுதோஷ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டபோது, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவுக் குரல் கொடுக்க, மமதா பானர்ஜி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே அவருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்துக்கு அபிஜீத் தீப்கே தனது ஆதரவை மமதாவிடம் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அவர்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். அவர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் இந்த இயக்கத்தின் முன்னோடிகளும் நிறுவனர்களும் ஆவர். நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு அவர்கள் தங்களின் முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். நாங்களும் அவர்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கினோம். வங்காளத்திற்கு வருகை தருமாறும் நான் அவர்களை அழைத்திருந்தேன். அவர்கள் இந்த நாட்டிற்காக மிகவும் சிறப்பான பணியைச் செய்து வருகிறார்கள் என்றார்.

முன்னதாக பேசிய அபிஜீத் தீப்கே,

அவர் எப்போதும் இளைஞர் இயக்கத்துடன் உறுதியாக நின்றிருக்கிறார். எனவே, நான் அவருக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூற விரும்புகிறேன். நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் ஒற்றுமையுடன் அதற்கு ஆதரவளிக்கிறோம். இருப்பினும், எங்கள் அமைப்பு ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான தளமாகும், நாங்கள் அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறோம் என்றார்.

SCROLL FOR NEXT