புதுடெல்லி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர் 10-ந் தேதி போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில், போராட்டத்துக்கு முன்பாக தன்னையும், கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, ஆஷுதோஷ் ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகளையும் அரசு கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சவுரவ் தாஸ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: எங்களை கைது செய்தாலும் போராட்டத்தை ஒடுக்க முடியாது. இளைஞர்கள் தங்களது உரிமைகள் மற்றும் எதிர்காலத்துக்காக தொடர்ந்து போராடுவார்கள் . சிறைக்கு செல்லவும், அதைவிட மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளோம். அக்டோபர் 10-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் திரள வேண்டும்”என்று பதிவிட்டுள்ளார்.
சவுரவ் தாஸின் குற்றச்சாட்ட்டு வைத்த சிறிது நேரத்தில் அபிஜித் தீப்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், எத்தனை பேரை கைது செய்வீர்கள்? அக்டோபர் 10-ந் தேதி ஒட்டுமொத்த நாடும் வருகிறது” என்று பதிவிட்டுள்ளார். எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் மும்பை சிவாஜி பூங்காவில் கடந்த 2 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) ஆதரவு தெரிவித்தது.