இம்பால்,
மணிப்பூரில் 2023ம் ஆண்டு நாகா, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்தது. பின்னர், ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டது.அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநில முதல்-மந்திரியாக யும்னம் கேம்சந்த் சிங் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, அம்மாநிலத்தில் வன்முறை தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டபோதும் அவ்வப்போது மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் மலை மாவட்டங்களில் குகி - நாகா சமூகங்களுக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, பதுங்கித் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 14 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.காம்ஜோங் மாவட்டத்தில் நாகா கிராமக் காவலர்கள் இருவர் கொல்லப்பட்டனர். காங்போக்பி மாவட்டத்தில் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதலில் நாகா தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர். உக்ருல் மாவட்டத்தில் காரில் சென்ற சந்தீப் ராய் என்பவரும் ஆயுதம் ஏந்திய நபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும் சில உயிரிழப்புகள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன; அவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
வன்முறையைத் தொடர்ந்து காம்ஜோங் மாவட்டத்தின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 24 மணி நேர முழு அடைப்புக்கு பழங்குடியின ஒற்றுமைக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தாக்குதல்களின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.