தேசிய செய்திகள்

பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவர்கள்; அதிர்ச்சி சம்பவம்

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் தம்மைகடு பகுதியில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அபிஷேக் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்தான். கமரெட்டி பகுதியை சேர்ந்த அபிஷேக் பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தான்.

மாணவன் மீது தாக்குதல்

இந்நிலையில், அபிஷேக் நேற்று முன் தினம் இரவு விடுதியில் இருந்தபோது விடுதியில் இருந்த சக மாணவர்கள் 12 பேர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அபிஷேக்கின் முகம், முதுகு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அபிஷேக்கை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மாணவன் அபிஷேக் பள்ளி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறி தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் விசாரணை

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து அபிஷேக்கிடம் கேட்டுள்ளனர். அப்போது சக மாணவர்கள் தன்னை தாக்கியதாக அபிஷேக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிஷேக்கை சக மாணவர்கள் தாக்கியதற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.