தேசிய செய்திகள்

பீகாரில் பயங்கரம்: பள்ளிக்கு சென்ற மாணவி சுட்டுக்கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் கைஜியா கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவரது மகள் சோனம் குமாரி (17). இவர் கிராமத்திற்கு அருகே உள்ள புசா நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

சுட்டுக்கொலை

இந்நிலையில், மாணவி சோனம் குமாரி நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் சோனம் குமாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் சோனம் குமாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அதேகிராமத்தை சேர்ந்த இளைஞர் மாணவியை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை சுட்டுக்கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.