தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு: நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை

தமிழ்நாடு-ஆந்திரா இடையிலான நீர் பங்கீடு, நதிகள் இணைப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

விஜயவாடா,

முதல்-அமைச்சர் விஜய் ஒருநாள் பயணமாக ஆந்திர மாநிலம் சென்றுள்ளார்.

சிறப்பான வரவேற்பு

தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார். பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா சென்றடைந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திர அரசு சார்பில் அம்மாநில மந்திரிகள் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் வரவேற்றனர்.

கனகதுர்கை அம்மன் கோவிலில் வழிபாடு

பின்னர் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு காரில் சென்றார். கோவிலுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு செண்டை மேளம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலுக்குள் சென்ற முதல்-அமைச்சர் விஜய் கனகதுர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சந்திரபாபு நாயுடுவுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு

கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் முதல்-அமைச்சர் விஜய் விஜயவாடா சென்று, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். முதல்-அமைச்சர் விஜய்க்கு மலர்க்கொத்து கொடுத்து சந்திரபாபு நாயுடு வரவேற்றார். இருவரும் இரு மாநில நதிநீர் பங்கீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு-ஆந்திரா இடையிலான நீர் பங்கீடு, நதிகள் இணைப்பு குறித்தும் கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி-காவிரி இணைப்பு குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. ஆந்திர நீர்வளத்துறை மந்திரி, தலைமை செயலாளர் உள்ளிட்டோரும் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT