தேசிய செய்திகள்

துணை விமானி கட்டாயம் என உத்தரவு; ‘சார் தாம்’ ஹெலிகாப்டர் சேவையை நிறுத்துவதாக ஆபரேட்டர்கள் எச்சரிக்கை

‘சார் தாம்’ யாத்திரை வழித்தடத்தில் பறக்கும் அனைத்து ஹெலிகாப்டர்களிலும் துணை விமானி கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத். கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் சேவை

இந்த புனித தளங்களுக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் டேராடூனில் இருந்து புறப்பட்டு, 4 புனித தளங்களுக்கும் சென்றுவிட்டு, பின்னர் டேராடூன் வந்து சேரும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன.

விபத்துகள்

கடந்த 2017 முதல் நடப்பாண்டு வரை, 9 ஆண்டு காலகட்டத்தில் ‘சார் தாம்’ யாத்திரைக்கான ஹெலிகாப்டர் வழித்தடத்தில், இதுவரை 5 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் கடைசியாக கடந்த 30-ந்தேதி நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்’ நிறுவனத்திற்கு சொந்தமானது.

புதிய உத்தரவு

இதனிடையே ‘சார் தாம்’ யாத்திரை வழித்தடத்தில் பறக்கும் அனைத்து ஹெலிகாப்டர்களிலும் துணை விமானி ஒருவர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும் உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம்(யூ.சி.ஏ.டி.ஏ.) சனிக்கிழமையன்று அறிவித்தது.

ஹெலிகாப்டர் சேவைகளை நிறுத்துவோம்

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு ‘சார் தாம்’ ஹெலிகாப்டர் சேவைகளை இயக்கி வரும் தனியார் ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக யூ.சி.ஏ.டி.ஏ.விற்கு ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் எழுதியுள்ள கடிதத்தில், துணை விமானி தொடர்பான உத்தரவு திரும்ப பெறப்படாவிட்டால், நவம்பர் 2-ந்தேதி(இன்று) முதல் ‘சார் தாம்’ யாத்திரைக்கான ஹெலிகாப்டர் சேவைகளை நிறுத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல், துணை விமானி உத்தரவை கட்டாயமாக்குவது அனைத்து ஆபரேட்டர்களுக்கும் அவர்களின் ஹெலிகாப்டர் சேவைகளை தொடர்வதில் நிதி ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குளிர்காலம்

இதனிடையே குளிர்காலத்தை முன்னிட்டு கங்கோத்ரி கோவில் நவம்பர் 10-ந்தேதியும், கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி நவம்பர் 11-ந்தேதியும், பத்ரிநாத் கோவில் நவம்பர் 16-ந்தேதியும் குளிர்காலத்திற்காக மூடப்பட உள்ளது. இந்த சூழலில் ஹெலிகாப்டர் சேவையை நிறுத்துவதாக ஆபரேட்டர்கள் அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT