திரண்ட மக்கள்- நாகப்பாம்பு 
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு மீட்பு

வீட்டிற்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

லக்னோ,

உத்தரப் பிரதேசம் மாநிலம் நப்பா நாக்லா கிராமத்தில், வீட்டிற்குள் புகுந்த மாபெரும் நாகப்பாம்பு ஒன்றை ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்குள் புகுந்த பாம்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் நப்பா நாக்லா கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டிற்குள் நேற்று (புதன்கிழமை) திடீரென பெரிய நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. வீட்டிற்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

திரண்ட மக்கள் கூட்டம்

வீட்டிற்குள் பாம்பு புகுந்த தகவல் கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதைடுத்து, அக்கம் பக்கத்தினரும் ஊர் மக்களும் அந்த நாகப்பாம்பைக் காண்பதற்காக வீட்டின் முன் குவியத் தொடங்கினர். வீட்டிற்குள் படம் எடுத்து ஆடிய பாம்பை மக்கள் தங்களது மொபைல் போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்றதால் அந்த இடமே மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.

பத்திரமாக மீட்பு

பாம்பின் நடமாட்டம் குறித்து உடனடியாக உள்ளூர் பாம்பு பிடி வீரரான சிந்து என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், வீட்டின் மூளையில் ஒளிந்திருந்த நச்சுத்தன்மை வாய்ந்த அந்த நாகப்பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக உயிருடன் மீட்டார். இதையடுத்து, மீட்கப்பட்ட நாகப்பாம்பு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. பாம்பு பிடிபட்ட பிறகே கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT