தேசிய செய்திகள்

போராட்டத்தை கைவிட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 3 நிபந்தனைகள் விதிப்பு

நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை வைத்துள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, இன்று நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' பேரணி நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்து இருந்தது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஜந்தர் மந்தரில் குவிந்தனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் தடியடி

அங்கும் அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் முயன்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் திரண்டனர் பேரணிக்கு அனுமதி மறுத்த டெல்லி போலீஸார், தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தினர்; கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த மோதலில், இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர்.இதற்கிடையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை மத்திய மந்திரி ஜேபி நட்டா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போராட்டத்தை கைவிட மூன்று நிபந்தனைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

நிபந்தனைகள்

1. நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும்

2. நீட் தேர்வால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்

3. சீரழிந்த கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்களின் இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய ஜேபி நட்டா, போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.