சி.பி.எஸ்.இ. விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு குளறுபடிகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.கடந்த 6-ந்தேதி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். மேலும் 20-ந் தேதிக்குள் கல்வி மந்திரி பதவி விலகாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என அந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.இதன்படி டெல்லி ஜந்தர் மந்தர் ரோட்டில் நேற்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்க டெல்லி மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.கட்சி நிறுவனர் அழைப்பை ஏற்று அவர்கள் எவர்சில்வர் தட்டு மற்றும் கரண்டி எடுத்து வந்து அவற்றின் மூலம் ஒலி எழுப்பி கோஷம் போட்டனர். பலர் கரப்பான் பூச்சி முகமூடிகளை அணிந்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் பகலில் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் குறைந்தது.இதற்கிடையே மாலை 6 மணி அளவில் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மாலை 5 மணிக்கு பிறகு போராட்டம் நடத்தக்கூடாது என்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலையவில்லை. மந்திரி பதவி விலகும் வரை அங்கிருந்து வெளியே செல்லப்போவது இல்லை என்றனர். இப்படியே நேரம் நீண்டு கொண்டே இருந்தது. இருட்டான பிறகும் அவர்கள் வெளியேறவில்லை. அங்கு இருட்டாக இருந்ததால் போராட்டக்காரர்கள் மின் விளக்கு வசதி செய்து தருமாறு போலீசாரிடம் கேட்டனர்.
நீண்ட நேர முறையீட்டுக்கு பிறகு மின் விளக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவிலும் போராட்டம் நடைபெற்றது. விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு முதல் போராட்ட களத்தில் உள்ள கழிவறைகளுக்கான தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை சேர்ந்த அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த அறப்போராட்டம் ஓயாது என்றும் போராட்டக்காரர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். 2-வது நாளாக ஜந்தர் மந்திரில் போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.