புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் என விமர்சனம் செய்ததாக தகவல் வெளியானது. இளைஞர்கள் குறித்துதான் அவ்வாறு பேசவில்லை என்று அவர் உடனடியாக விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனாலும் அந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்தநிலையில் சமூக வலைதளத்தில் ஒரு புதிய கட்சிக்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதுதான் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'. ஆம் ஆத்மியின் சமூக ஊடகப்பிரிவில் இடம்பெற்றிருந்த அபிஜித் தீப்கே, இந்த கட்சியை நிறுவியிருக்கிறார். வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று விமர் சித்தநிலையில் இதனை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி-இதுதான் கட்சியின் கொள்கை. இந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை இந்த கட்சியில் இணைத்துக்கொண்டு வருகிறார்கள். தொடங்கிய 4 நாட்களுக்குள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். 2 லட்சம் பதிவுசெய்த உறுப்பினர்களையும் பெற்று ஒரு அலையை உருவாக்கியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மஹூவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்றவர்களும் இதில் இணைந்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படாமலேயே பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, கட்சித்தாவும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை போன்ற மக்களை கவரும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த கரப்பான்பூச்சி கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுமா? அல்லது டிஜிட்டல் புரட்சியில் ஈடுபட்டு தொடர் அதிருப்தியை வெளிப்படுத்துமா? என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிர்க்கட்சியாக ‘தேசிய ஒட்டுண்ணி முன்னணி’ என்ற தளமும் தொடங்கப்பட்டுள்ளது.