தேசிய செய்திகள்

3 மாதங்களில் வணிக கேஸ் விலை 81 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வணிக கேஸ் சிலிண்டர் விலையை இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ.993 மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.

இதனிடையே, மாதத்தின் முதல் நாளான இன்று நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டு ரூ. 3 ஆயிரத்து 237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வணிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு நுகர்வோருக்கு (வாடிக்கையாளர்கள்) நேரடி பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

இந்நிலையில் 3 மாதங்களில் வணிக கேஸ் விலை 81 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நான் சொல்லியிருந்தேன் - தேர்தலுக்குப் பிறகுதான் பணவீக்கம் சூடு பிடிக்கும் என்று.. தேர்தல் முடிந்துவிட்டதால் தற்போது வணிக கேஸ் சிலிண்டர் விலையை இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ.993 மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,380 உயர்ந்துள்ளது. வெறும் 3 மாதங்களில் வணிக கேஸ் விலை 81 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தேநீர்க் கடை, தாபா, ஓட்டல், பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை என பொதுமக்கள் பலருடைய சுமை அதிகரித்துள்ளது. இது அன்றாடம் உணவு கிடைப்பதில் பொதுமக்களுக்கும் கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலில் கேஸ் சிலிண்டர் மீதான விலை உயர்வு.. அடுத்தது பெட்ரோல்-டீசல் விலை உயர்வாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.