ஆக்ரா,
பிரபல ஆன்மிகப் பேச்சாளரும், மத்தியப் பிரதேச பாகேஷ்வர் தாம் தலைவருமான தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரிக்கு எதிராக, கடவுள் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி அன்று 'ராம் கதா' சொற்பொழிவு நடைபெற்றது. அப்போது, தீரேந்திர சாஸ்திரி பகவான் ராமர் மற்றும் கிருஷ்ணரின் உடல் அமைப்புகளை ஒப்பிட்டுப் பேசினார். அப்போது, "எங்கள் ராமர் மிகவும் நேரடியானவர்; ஆனால் உங்கள் கிருஷ்ணர் கோணலானவர்" என்று குறிப்பிட்டதுடன், கிருஷ்ணரின் 'திரிபங்கா' ( 3 இடங்களில் வளைந்த) திருவுருவத் தோற்றம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
இந்த பேச்சு நாடு முழுவதும் உள்ள கிருஷ்ண பக்தர்களைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங் என்பவர் ஆக்ரா சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், "துவாபர யுகத்தில் மனித வடிவில் தோன்றிய கிருஷ்ணரின் வம்சாவளியினர் (ஜாடூன், ஜடேஜா போன்ற சமூகத்தினர்) இன்றும் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
தானும் தாயார் வழியில் கிருஷ்ணரின் வம்சாவளியைச் சேர்ந்தவன். தீரேந்திர சாஸ்திரியின் இந்த அவதூறான பேச்சு கிருஷ்ணரின் வம்சாவளியினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தி, சமூக நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த ஆக்ரா சிவில் நீதிபதி காஞ்சன் குமாரி, வழக்கை முறைப்படி பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, தீரேந்திர சாஸ்திரி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தான் ராமருக்கும் கிருஷ்ணருக்கும் இடையே எந்தப் பாகுபாடும் காட்டவில்லை என்றும், பக்தி பாவத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.