சென்னை,
தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில், சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.
இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரெங்கசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், காரில் கோவளம் செல்கிறார். இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் 5 மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள், அமித்ஷாவுடன் இரவு விருந்தில் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.
நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தென்மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மதியம் 1.30 மணி வரை நடக்கும் இந்த மாநாட்டில் தென்மாநில முதல்-மந்திரிகளுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேசம் என்பதால் புதுச்சேரியில் துணைநிலை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் துணைநிலை கவர்னர் கைலாசநாதன் மாநாட்டில் பங்கேற்பதாக கவர்னர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.