தேசிய செய்திகள்

குஜராத் வெற்றிக்கு பிரதமர் மோடி மத உணர்வுகளை தூண்ட முயற்சி செய்கிறார் காங்கிரஸ் குற்றச்சாட்டு

குஜராத்தில் வாக்குகளை பெற பிரதமர் மோடி மத உணர்வுகளை தூண்ட முயற்சி செய்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான கேதார்நாத்துக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

அப்போது 2013ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த கேதார்நாத் கோவிலை மீண்டும் கட்டித் தர நான் முன்வந்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதற்கு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் பிரதமர் மோடி மரபுகளுக்கு அவமரியாதை செய்கிறார் என பதிலடியை கொடுத்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அதனை மனதில் வைத்து பிரதமர் மோடி திட்டமிட்டு கேதார்நாத்திற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார், கோவிலில் தெய்வத்திற்கு முன்னதாக இத்தாலியன் கண்ணாடியை அணிந்து கொண்டு அவர் பேசியது அவருடைய அகந்தையை காட்டுகிறது.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடும் போது கங்கையை தாய் என்று கூறினார், இப்போது குஜராத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் கேதார்நாத் சென்று உள்ளார் என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தொலை தொடர்பு பிரிவு ரந்தீப் சுர்ஜிவாலா பேசுகையில், மோடிஜி கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் மேடை போட்டு, கோவில் முன்னதாகவே இறைவன் இருக்கும் இடம் நோக்கி பின்பகுதியை காட்டிக்கொண்டு பேசி நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு அவமரியாதை செய்து உள்ளார், என சாடிஉள்ளார். பிரதமர் மோடி இறைவன் சிவனுக்கு முன்னதாக பொய் பேசுகிறார்! கேதார்நாத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு ரூ. 6 ஆயிரம் கோடி வழங்கியதை மோடிஜி மறந்துவிட்டார் போல என கூறிஉள்ளார் ரந்தீப் சுர்ஜிவாலா. மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்பிஎன் சிங், பிரதமர் மோடி மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வந்ததாக எந்தஒரு ஆவணமும் கிடையாது என்றார்.

வெள்ளத்தின் போது என்ன நடந்தது என்பதில் பிரதமர் மோடி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார் என குற்றம் சாட்டிய ஆர்பிஎன் சிங், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இழப்புகளை மதிப்பிட குழு ஒன்றை அமைத்தது, ரூ. 8 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்தது. உடனடியாக ரூ. 2200 கோடி வழங்கப்பட்டது, ஆனால் கடந்த மூன்று வருடமாக ஆட்சிசெய்யும் பிரதமர் மோடி சிறிய தொகையை கூட அதற்காக வழங்கவில்லை என சாடினார். பிரதமர் மோடி அரசியல் சந்தர்ப்பவாதி என விமர்சனம் செய்த சுர்ஜிவாலா, குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் வாக்குகளை பெறுவதற்காக மத உணர்வுகளை தூண்டிவிட முயற்சி செய்கிறார் எனவும் குற்றம் சாட்டிஉள்ளார். டுவிட்டரிலும் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சனம் செய்து உள்ளார் சுர்ஜிவாலா.

உண்மை வெற்றியடையும், இறைவன் சிவனுக்கு தெரியும். இறைவன் முன்னதாக சத்தம் போட்டு பேசுவது, சொல்லாட்சியை நிறுத்திக்கொள்ளுங்கள், எனவும் கேட்டுக் கொண்டு உள்ளார்.