டெல்லி,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது
இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல முறை நடந்துள்ளது. வாக்காளர் பட்டியல் உள்ள குளறுபடிகளை களையும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள், ஒரே நபர் வாக்காளர் படியலில் வெவ்வேறு முகவரிகள் இருப்பது என பல்வேறு குளறுபடிகளை சரிசெய்து அந்த பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் இந்த தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் 2002-04ம் ஆண்டுக்குப்பின் முதல்முறையாக கடந்த 2025ம் ஆண்டு முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சட்டவிரோதம் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்பது இந்தியர்களின் வாக்குரிமையை பறிக்கும் வழியாகும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சட்டவிரோதமானது.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள், ஒரே நபர் வாக்காளர் படியலில் வெவ்வேறு முகவரிகள் என இந்த 4 காரணங்களை தொடர்ந்து பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடவடிக்கைகளை உடனையாக நிறுத்த வேண்டும். தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.