தேசிய செய்திகள்

சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சியை காங்கிரஸ் அரசு தடுத்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிக்கிம் மாநிலம் ஆர்க்கிட் மலர்களின் தோட்டம் என்று பிரதமர் மோடி கூறினார்.

சிக்கிம்,

சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கேங்டாக் பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மாடி, ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

கிழக்கின் சொர்க்கம் சிக்கிம்; இந்த மாநிலம் ஆர்க்கிட் மலர்களின் தோட்டம். ஆர்க்கிட் மலர்களை காணவில்லை எனில் உண்மையான அழகை நீங்கள் அனுபவிக்கவில்லை என அர்த்தம். ஒரு புதிய உணர்வு, மகிழ்ச்சி, எங்கும் நிறைந்திருந்த பண்டிகை சூழலைக் கண்டு நான் வியக்கிறேன்

சிக்கிமின் வண்ணங்கள் தனித்துவமானவை; இணையற்ற அழகு, அமைதி உள்ளிட்டவை பேரின்பம். மக்களிடையே பாகுபாட்டை உருவாக்க முயற்சி நடக்கும்போது ஒரே இந்தியா என்ற பார்வையை சிக்கிம் கொண்டுள்ளது. சிக்கிம் மக்களின் உண்மையான தேசபக்தி நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றுள்ளது.

அரசியல் சுயநலத்திற்காக, சாதி பாகுபாடு மற்றும் பிரிவினைவாதத்தை வளர்க்க தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், இன்று சிக்கிம் மாநிலம் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை உலகுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. இதுதான் உண்மையான தேசப்பற்று. இத்தகைய முயற்சிகளின் மூலம்தான் புதிய தலைமுறையினரிடம் தேசபக்தி உணர்வுகள் விழித்தெழும்.

சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. மாநிலத்தில் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது. இன்று பாஜக அரசு செய்து வரும் பணிகளை முன்னரே செய்திருக்க முடியும், ஆனால் காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை. உதாரணமாக, சிவோக்-ரங்போ ரெயில் பாதை திட்டம் 2008-09 ஆம் ஆண்டிலேயே அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிக்கிமில் வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்தன. இப்போது முதல்முறையாக, சிக்கிம் மாநிலத்திற்கு ரெயில் பாதை அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.