பெங்களூரு
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததும் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்று கொண்டனர். அப்போது, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது.
ஆனால் கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்களும் அதனை ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அதிகார மாற்றம் எதுவும் காணப்படவில்லை.
அவ்வப்போது சித்தராமையாவிடமும், டி.கே. சிவக்குமாரிடமும் முதல்-மந்திரி பதவி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அப்போது எல்லாம், இருவரும் அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும், முதல்-மந்திரி சித்தராமையா கூறும்போது, இந்த விவகாரத்தில், கட்சி மேலிட கட்டளைக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்படுவோம் என்றார்.
இந்த சூழலில், துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு வழிவிடுவதற்காக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறார் என நேற்று தகவல் வெளியானது. இதனை அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவரான ஆர்.வி. தேஷ்பாண்டே உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், கர்நாடக முதல்-அமைச்சர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று டி.கே. சிவக்குமார் உடன் பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகைக்கு சித்தராமையா சென்றார். எனினும், கவர்னர் கெலாட் இல்லாத சூழலில், அவருடைய சிறப்பு செயலாளர் பிரபு சங்கரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்.
இதன்பின்னர் வெளியே வந்த அவர், கர்நாடக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு மாநிலங்களவை பதவி தரப்படும் என கட்சி மேலிடம் முன்வந்தது. ஆனால், நான் மறுத்து விட்டேன். எனக்கு தேசிய அரசியலில் விருப்பமில்லை என்றார். கர்நாடக மக்களுக்கு நான் தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் கூறினார்.
டெல்லியில் இருந்து நேற்றிரவு இருவரும் கர்நாடகாவுக்கு திரும்பியிருந்த நிலையில், அவர்களை டெல்லிக்கு மீண்டும் வரும்படி கட்சியின் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லிக்கு சித்தராமையா இன்றிரவு புறப்பட்டு சென்றார். டி.கே. சிவக்குமாரும் புறப்பட்டு செல்வார் என கூறப்படுகிறது.
இந்த பயணத்தில் கட்சியின் உயர்மட்டத்தினரிடம் சித்தராமையா பேசவுள்ளார். கட்சியின் புதிய சட்டமன்ற குழு தலைவர், மந்திரி சபையில் இடம் பெறுவோர் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு உள்ளிட்ட பிற விசயங்கள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
ஏனெனில், கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவக்குமார் உள்ளார். அவர் முதல்-மந்திரியாகும் பட்சத்தில் காலியாகும் அந்த பதவிக்கு யாரை அமர்த்துவது? என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த பயணத்தின்போது, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை இருவரும் சந்தித்து பேசுவார்கள் என தெரிகிறது.