தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர்கள் படுகொலை வழக்கு: 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்ட மாவோயிஸ்டுகள் பிரமிலா மோதியாம் உள்ளிட்ட 10 பேரையும் குற்றவாளிகளாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி உறுதி செய்தார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ்தார் மாவட்டம் ஜிராம் காட்டி தேசிய நெடுஞ்சாலையில் 'பரிவர்த்தன் பேரணி' நடத்தப்பட்டது. அப்போது, இந்த பேரணியின் மீது திடீரென கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள், ஐ.இ.டி. வெடிகுண்டை வெடிக்கச் செய்து, கண்மூடித்தனமாக சுட்டு. கையெறி குண்டுகளை வீசினர்.

இந்த கோரத் தாக்குதலில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் மற்றும் அவரது மகன் தினேஷ், எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர கர்மா, முன்னாள் மத்திய மந்திரி வித்யா சரண் சுக்லா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் முதலியார் உள்ளிட்ட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

என்.ஐ.ஏ. கோர்ட்டு

மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை ஜக் தால்பூர் சிறப்பு என்.ஐ.ஏ. கோர்ட்டு விசாரித்து வந்தது. நீதிபதி அஜய் சிங் ராஜ்புத், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாவோயிஸ்டுகள் பிரமிலா மோதியாம் உள்ளிட்ட 10 பேரையும் குற்றவாளிகளாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி உறுதி செய்தார்.

தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து தண்டனை விவரங்கள் குறித்த தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணையின்போது ஒருவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

SCROLL FOR NEXT