தேசிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காங்கிரஸ் எம்.பி. பணி நீக்கம்; பதவி விலக முதல்-மந்திரி வலியுறுத்தல்

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து, அவரிடம் பல்கலைக்கழகத்தின் உள்மட்ட குழு ஒன்று விசாரணை நடத்தியது.

புதுடெல்லி

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காங்கிரஸ் எம்.பி. பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை பதவி விலகும்படி முதல்-மந்திரி வலியுறுத்தி உள்ளார்.

மணிப்பூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

பாலியல் துன்புறுத்தல்

இந்நிலையில், பணியில் இருந்தபோது அவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. கூட்டம் என்ற பெயரில் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றார் என குற்றச்சாட்டு எழுந்தது. வகுப்பறையில் அவர் ஆபாச கருத்துகளை பேசினார் என்றும் முறையற்ற வகையிலான பேச்சுகளை பேசினார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து, அவரிடம் பல்கலைக்கழகத்தின் உள்மட்ட குழு ஒன்று விசாரணை நடத்தியது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கடுமையான தண்டனையாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

முதல்-மந்திரி வலியுறுத்தல்

இந்த சூழலில், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். லட்சுமி நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகம் நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்களை கலைந்து போக செய்தனர்.

இந்த பேரணியில் மகளிர் அணி தேசிய செயலாளர் சங்கீதா யாதவ், மாநில தலைவி அர்ச்சனா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவரை எம்.பி. பதவியில் இருந்து விலகும்படி மாநில முதல்-மந்திரி ஒய்.கே. சிங் வலியுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT