தேசிய செய்திகள்

‘கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும்’ - சசி தரூர் நம்பிக்கை

கருத்து கணிப்பு முடிவுகள் ஆச்சரியமளிக்கவில்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 4 -ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை அகற்றிவிட்டு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புவதாக சசி தரூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கருத்து கணிப்பு முடிவுகள் எங்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை. நாங்கள் கள நிலவரத்தைப் பார்த்தோம். நான் 12 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன்.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாங்கள் 75 இடங்களுக்கு மேல் எளிதாக வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதை உறுதிப்படுத்தியுள்ளன.

நம்முடையது முற்றிலும் ஒரே தன்மையுடைய சமூகம் அல்ல. நாம் பாலினப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை, வர்க்கப் பிரச்சினை, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு துல்லியமான கருத்துக் கணிப்பை நடத்துவதற்கு, நம்பத்தகுந்த வகையில் போதுமான பெரிய மாதிரித்தொகுப்பை ஒருபோதும் பெற முடியாது.

மேற்கு வங்கத்தில் நாம் கேள்விப்பட்ட வரை, பலர் கருத்துக் கணிப்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இல்லை என்று தெரியவந்துள்ளது. வழக்கமாக, 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பதிலளிக்க மாட்டோம் என்று கூறுவார்கள். ஆனால் இந்த முறை மேற்கு வங்காளத்தில் ஒரு கருத்து கணிப்பு நிறுவனம், 60 சதவீத மக்கள் பதிலளிக்க மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளது. அப்படியென்றால், 60 சதவீதம் பேர் பதிலளிக்காத ஒரு கருத்து கணிப்பால் என்ன பயன்?”

இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.