தேசிய செய்திகள்

டெல்லி ஏ.ஐ. மாநாட்டு அரங்கில் காங்கிரசார் போராட்டம்: ராகுல் காந்தியே காரணம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு

இந்த போராட்டத்தின் வீடியோ பதிவை இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு கடந்த 16-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி (நேற்று) வரை நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினர் சிலர் ஏ.ஐ. உச்சி மாநாட்டின் கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டுகளில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'பிரதமர் மோடி சமரசமாகிவிட்டார்', 'இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்', 'எப்ஸ்டீன் கோப்புகள்' என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியபடி அரங்கத்திற்குள் ஓடி வந்தனர். அவர்களிடம் கட்சி கொடிகள் எதுவும் இல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தாங்கள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 நபர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஏ.ஐ. கண்காட்சி அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இந்த போராட்டத்தின் வீடியோ பதிவை இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டது. அதில், “ஊடகம், அமைப்பு, பிரதமர் கூட சமரசமாகி இருக்கும் ஒரு நாட்டில், அவற்றுக்கு எதிராக குரல் எழுப்புவதற்கு எந்த அமைப்புதான் இருக்கிறது?. தெருவில் போராடினால் தடுக்கப்படுகிறோம். சமூக ஊடகங்களில் வெளியிட்டால் நீக்கப்படுகிறது. அப்படியிருக்க நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது?

நாங்கள் ஏ.ஐ. மாநாட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. இந்திய நலன்களுக்கு எதிராக சமரசம் செய்வதற்குத்தான் எதிராக இருக்கிறோம். நாட்டின் விவசாயிகளிடம் பேரம் பேசப்படும்போது. இந்தியாவுக்கு எதிரான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது. இளைஞர்கள் வேலையில்லாமல் வைக்கப்பட்டு, வெறுப்பு அரசியலில் இழுக்கப்படும்போது. நாம் அமைதியாக இருக்க வேண்டுமா?

இந்த நாடு 140 கோடி குடிமக்களுக்கு சொந்தமானது. மகாத்மா காந்தி காட்டிய பாதையில் நாம் எப்படி நடப்பது என்று நமக்குத் தெரிந்தால், பகத்சிங் காட்டிய பாதையில் எப்படி நடப்பது என்றும் நமக்குத் தெரியும். நாட்டின் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை ஒருபோதும் பேரம் பேச அனுமதிக்க மாட்டோம்” என்று இளைஞர் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

இளைஞர் காங்கிரசாரின் இந்த போராட்டத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் இந்தியாவின் புகழை கெடுப்பதற்காக இந்த போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி உள்ளது.