கலபுரகி
நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.
மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தன. தமிழகத்தில் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த அனைத்து 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கூறும்போது, தமிழகம் மற்றும் கேரளாவில் காங்கிரஸ் தொடர்புடைய கூட்டணியே பெரும்பான்மை பெறும் என கூறியதுடன், அசாமில் கணித்ததற்கும் கூடுதலாக சிறப்பான வெற்றி கிடைக்கும் என கூறினார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பல்வேறு கலவையான முடிவுகள் கிடைத்துள்ள சூழலில், கட்சியின் தொண்டர்களிடம் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியும், கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் உறுதியாக வெற்றியை பெறும் என கூறியுள்ளார்.
கடந்த 9-ந்தேதி அசாமில் தேர்தல் முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சி பின்தங்கி உள்ளது என கூறப்படுகிறது. இதனை கார்கே நிராகரித்ததுடன், கணித்த தொகுதிகளுக்கும் கூடுதலான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.
புதுச்சேரியில் பா.ஜ.க. மற்றும் என்.ஆர். காங்கிரசை விட சிறப்பான முறையில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது என்றும் முடிவுகளும் அதற்கேற்ப எங்களுக்கு சாதகம் ஏற்படுத்தும் நிலையிலேயே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை பெறும் என கூறப்படும் சூழலில், கார்கேவும் அதனை அங்கீகரிக்கும் வகையில் கூறினார். மேற்கு வங்காளத்தில் கட்சியின் அடித்தளம் வலுப்படும் வகையில் எங்களுடைய பிரசாரம் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.