புதுடெல்லி: வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியைக் கிண்டல் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் சட்ட மேலவையின் 28 இடங்களுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக, கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அங்கு பா.ஜ.க. - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றியது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் பா.ஜ.க. 4 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பீகாரிலும் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது.இந்நிலையில், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டபோதும் காங்கிரஸ் வெற்றி பெறாததைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி அக்கட்சியைக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார் மற்றும் கர்நாடகம் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 இடங்களுக்கு எம்எல்சி தேர்தல்கள் நடைபெற்றன.இத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.