தேசிய செய்திகள்

குஜராத்தில் தொடங்கி அருணாச்சல பிரதேசம் வரை 2ஆம் கட்டமாக இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்த திட்டம்?

12 மாநிலங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிமீ நடைபயணம் 150 நாட்களில் நிறைவடையும்.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.

12 மாநிலங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,500 கிமீ நடைபயணம் 150 நாட்களில் நிறைவடையும்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிகரமாக அமைந்தால், மீண்டும் இரண்டாம் கட்ட யாத்திரை குஜராத்தில் தொடங்கி அருணாச்சல பிரதேசம் வரை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.பாரத் ஜோடோ யாத்திரை குஜராத் மற்றும் இமாச்சல தேர்தல் பிரச்சாரங்களுக்காக நடத்தப்படவில்லை.

இரண்டாம் கட்ட யாத்திரை குஜராத்தில் தொடங்கி அருணாச்சல பிரதேசம் வரை 3,100 கிமீ நடைபயணம் 150 நாட்களில் நிறைவடையும். உலகில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மேற்கொள்ளாத மிக நீண்ட நடைப்பயணம் இதுவாகும். முன்னதாக இது சீனத் தலைவர் மாவோ சேதுங்கால் மேற்கொள்ளப்பட்டது" என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.