பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வருபவர் தனுஷ் (வயது 19). இவரும், 19 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக வாலிபர் கூறி இருந்தார். அத்துடன் இளம்பெண்ணுடன் தனுஷ் உல்லாசமும் அனுபவித்திருந்தார். இதற்கிடையே, 2 பேருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் அவர்கள் பிரிந்து விட்டனர்.
அதே நேரத்தில் திருமண ஆசைகாட்டி தன்னை கற்பழித்துவிட்டதாக கூறி பெங்களூரு போலீசில் தனுஷ் மீது இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் மீதாான வழக்கை ரத்து செய்ய கோரியும், கீழ் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் தனுஷ் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்தது. விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, நாங்கள் 2 பேரும் காதலித்ததாகவும், திருமணம் செய்ய தயாராக இருந்ததாகவும், இதனால் பரஸ்பரம் சம்மதத்துடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
அப்படி இருக்கையில் வாலிபர் மீது பலாத்கார வழக்குப்பதிவானதை ஏற்றுக் கொள்ள முடியாது. இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்திருப்பது பற்றியும் நிரூபணமாகவில்லை. ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உல்லாசமாக இருப்பது பலாத்காரம் ஆகாது. எனவே வாலிபர் மீது பதிவான பலாத்கார வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
உடனடியாக வாலிபரை விடுதலை செய்ய வேண்டும். ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு நகலை மெயில் மூலமாக சிறை நிர்வாகத்துக்கு அனுப்பி, எந்தவித தாமதமும் இன்றி சிறையில் இருந்து வாலிபரை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி நாகபிரசன்னா உத்தரவு பிறப்பித்துள்ளார்.