தேசிய செய்திகள்

பண்டிகை காலத்தையொட்டி யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை

யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பதால் வர்த்தகம் பாதிக்கப்படும் என வணிகர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் 0.4 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி வணிகர்கள் ரூ.3,000-க்கான யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு ரூ.12ம், ரூ.50,000-க்கு ரூ.200ம் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் எனவும், ரூ.75,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என அடுத்தடுத்து வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு இக்கட்டண முறை அமலுக்கு வந்தால் வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் என வணிகர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. பண்டிகைக் காலம் முடியும் வரை இந்த கட்டண முறையை ஒத்தி வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த சூழலில், மக்களின் வணிக நலனை கருத்தில் கொண்டு இந்த அமலாக்கத்தை வரும் 2027 ஜனவரி வரை தள்ளிவைப்பது குறித்து என்.பி.சி.ஐ. பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT