தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி: போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள்

கணவர் குறித்து இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் போலீஸ் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சாவான் மாவட்டம் கம்ஹரியா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் கடந்த வியாழக்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இளம்பெண்ணை அவரது கணவர் தாக்கியுள்ளார்.

பெண் பாலியல் வன்கொடுமை

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டுக்காரரின் செல்போன் மூலம் போலீசை தொடர்புகொண்டுள்ளார். இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர், தனது கணவர் குறித்து இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்.

அதேவேளை, போலீஸ் நிலையத்தில் 6 போலீசார் பணியில் இருந்தனர். இளம்பெண்ணை போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் இரவு தங்க வைத்துள்ளனர். அப்போது, அந்த போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த கான்ஸ்டபிள் இளம்பெண் தங்கவைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

5 போலீசார் சஸ்பெண்ட்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் மறுநாள் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்ற நிலையில் இளம்பெண்ணை போலீஸ் நிலையத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிளை போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவம் நடந்த போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT