தேசிய செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவிடம் ஆதரவு கேட்டு பாஜக ரகசிய பேச்சுவார்த்தை?

மத்திய அரசு தரப்பில் திமுகவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சென்னை,

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுகவின் ஆதரவை பெறுவதற்காக பாஜக தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 16-ந் தேதி மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு மசோதாவை அறிமுகப்படுத்தியது. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 ஆக உயர்த்துவது, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றிருந்தன.

மேலும், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்தது.

இதற்கிடையே, மத்திய அரசு தரப்பில் திமுகவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பாஜக தலைவர்கள் திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த பேச்சுவார்த்தையின்போது, தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது என்பதற்கும், மாநிலத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கும் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT