தேசிய செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்

தொகுதி மறுவரையறை மசோதாவில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது.

மசோதா தோல்வி

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்க ளுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. எனவே கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பாக 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

ஆனால் வாக்கெடுப்பில் மசோதாவுக்கு 298 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் 54 வாக்குகள் குறைவாகி மசோதா தோல்வியடைந்தது.

நாளை தாக்கல்

இந்த நிலையில், மத்திய அரசு தற்போது அந்த மசோதாவில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. அதில் யாருக்கும் பாகுபாடு இல்லாமல், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்படும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதன்பிறகு, மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீட்டின் தற்போதைய விகிதம் 2051-ம் ஆண்டு வரை பாதுகாக்கப்படும்.

இதையொட்டி மத்திய மந்திரிசபை 2 நாட்களுக்கு முன்பு புதிய 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. அவை தொகுதி மறுவரையறைக்கான அரசியலமைப்பு (132-வது திருத்தம்) மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா-2026 ஆகியவை ஆகும்.

முதலாவது மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் அறிமுகம் செய்கிறார். 2-வது மசோதாவை உள்துறை மந்திரி அமித்ஷா அறிமுகம் செய்வார் என மக்களவை அலுவல்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அர்ஜூன்ராம் மெக்வால் தாக்கல் செய்யும் மசோதாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் அதிகரிக்கும் வகையிலான அம்சங்களும் இடம் பெறுகிறது.

தொகுதி மறுவரையறை ஆணையம்

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநிலங்களுக்கான மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய 543-ல் இருந்து சுமார் 816 ஆக உயரும். அதன்படி, தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும். தற்போது மக்களவையில் தமிழகத்தின் பங்கு 7.18 சதவீதமாக உள்ளது. புதிய தொகுதி எண்ணிக்கையின்படி, இந்தப்பங்கு சுமார் 7.23 சதவீதமாக உயரும். இந்த எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகளும் புதிதாக வரையறுக்கப்படும். இதற்காக புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும்.

தொகுதி மறுவரையறையுடன் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடும் நடைமுறைக்கு வர உள்ளது. 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, மக்களவையிலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். புதிய தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT