தேசிய செய்திகள்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து கொண்டு வரப்பட்டதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் தோல்வி அடைந்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது.

மகளிருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையையும், காலாவதியான 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் அடிப்படையாகக் கொண்டு நியாயமற்ற அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று அவர்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், மசோதாவை எதிர்த்து 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா வெற்றி பெற 3-ல் 2 பங்கு வாக்குகள், அதாவது மொத்தம் 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து கொண்டு வரப்பட்டதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.