புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த திருத்த சட்டத்தால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இதனால் நுகர்வோர் எந்தவொரு யு.பி.ஐ. கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்தம்) மசோதா-2026-ஐ நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அதன்மீது விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. வில்சன், கேரள எம்.பி. ஜான் பிரிட்டஸ் உள்பட பலர் எதிர்த்தனர். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், இந்த திருத்த சட்டத்தால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், செயல்படுத்தும் விதிகளை மட்டுமே வழங்குகின்றன. பயனாளர்கள் மீது எந்த வரியையோ அல்லது பரிவர்த்தனைக் கட்டணங்களையோ விதிக்கவில்லை. நுகர்வோர் எந்தவொரு யு.பி.ஐ. கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதுபோல சிறு வணிகர்களும், மளிகைக் கடைக்காரர்களும் எம்.டி.ஆர். (வணிகர் தள்ளுபடி) செலுத்தத் தேவையில்லை” என்றார். இவரது பதில் உரைக்கு பிறகு மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மக்களவை இதனை ஏற்கனவே நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.