கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தொடர் விடுமுறை: திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மொஹரம் பண்டிகை (நேற்று) மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று திருப்பதி கோவிலில் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியதால் தரிசன வரிசையில் இருந்து கோகற்பம் அணை வட்டச்சாலை அருகில் உள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காந்திருந்தனர்.

பக்தர்களின் வருகைக்கு ஏற்ற தங்கும் அறைகள் கிடைக்காததால் அங்குள்ள பூங்காக்கள், சாலையோரம், மண்டபங்களில் பக்தர்கள் தங்கி உள்ளனர். மேலும் அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஆக்டோபஸ் கட்டிடம் தாண்டி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று திருப்பதி ஏழுமலையானை 81,340 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 44,874 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 76 லட்சம் கிடைத்தது. மேலும் அன்றைய தினம் 4 லட்சத்து 42 ஆயிரம் லட்டுகள் விற்பனையானது.3 லட்சத்து 31 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.