தேசிய செய்திகள்

இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது - சுப்ரீம் கோர்ட்டு

தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.

புதுடெல்லி,

இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு பெற முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் முஸ்லிம் மட்டுமே. அதில், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என எந்த உட்பிரிவையும் அவர் கோர முடியாது. இட ஒதுக்கீடு சலுகைக்காக பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர்.

முஸ்லிமாக மதம் மாறியவா்களும் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:

”இந்து சமூக அமைப்பிலிருந்து இந்து அல்லாத வேறொரு சமூக அமைப்பிற்கு மதம் மாறிய ஒருவர், தான் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இந்திய அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளைக் கோர முடியாது. முந்தைய சமூக அமைப்பில் அவர் அனுபவித்த பின்தங்கிய நிலை, அவர் மாறிய புதிய மதத்திலும் அவருக்கு 'பின்தங்கிய வகுப்பு' என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கு அடிப்படையாக அமையாது.

அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையின் 3-வது பிரிவின்படி, ஹிந்து மதம், சீக்கிய மதம் அல்லது பவுத்த மதம் தவிர வேறொரு மதத்தைப் பின்பற்றும் நபர், 'பட்டியல் சாதி' உறுப்பினராகக் கருதப்பட மாட்டார். எனவே, அதில் குறிப்பிடப்படாத வேறொரு மதத்திற்கு மாறிய ஒரு நபர், தனது முந்தைய சாதியுடன் தொடர்புடைய 'பட்டியல் சாதி' அந்தஸ்தை இழக்கிறார். இத்தகைய சூழலில், அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் 'பட்டியல் சாதி' உறுப்பினராக இருப்பதன் அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளை அவர் கோர முடியாது.

ஒரு நபர் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலை, அவர் மதம் மாறிய பிறகு, வேறொரு குறிப்பிட்ட பின்தங்கிய சமூகப் பிரிவில் உறுப்பினராகச் சேருவதற்குத் தேவையான சட்டப்பூர்வ அடிப்படையை வழங்க முடியாது. மாறாக, இந்து சமூக அமைப்பிலிருந்து வேறொரு சமூக அமைப்பிற்கு மாறிய ஒருவர், மீண்டும் இந்து சமூகத்திற்குத் திரும்பும்போது, ​​அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் அவருக்குச் சாதகமான நடவடிக்கைகளைப் பெறுவதற்கான உரிமை உள்ளதா என்பதை, அவர் முன்பு கொண்டிருந்த நிலையை மட்டும் வைத்துத் தீர்மானிக்க முடியாது.

‘ஓா் இந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அவா் வெறும் முஸ்லிமாக மட்டுமே மாறுகிறாா். அவரது பழைய ஜாதி அடையாளம் முற்றிலும் அழிந்துவிடுகிறது’ என 1951-ஆம் ஆண்டு வெளியான சென்னை ஐகோர்ட்டின் தீா்ப்பு ஒன்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. நீதிமன்றங்களின் இத்தகைய இறுதித் தீா்ப்புகளை அரசு நிா்வாக அரசாணையின் மூலம் மாற்றிவிட முடியாது. இது, அதிகாரப் பகிா்வு கோட்பாட்டுக்கு எதிரானது’ எனத் தெரிவித்து, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என அதில் கூறியுள்ளார்.

மதம் மாறிய இஸ்லாமியர்கள் ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு பெற முடியாது. மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சிறப்பு சலுகைகளை வழங்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.

SCROLL FOR NEXT