தேசிய செய்திகள்

மானிய விலையில் சிலிண்டர் பெற அக்டோபர் 1-ந்தேதி முதல் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்

பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு சந்தை விலையின் அடிப்படையிலேயே சிலிண்டர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறும் நுகர்வோருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியம் வெளிப்படைத்தன்மையுடன் சென்றடைவதை உறுதி செய்யவும், தகுதியற்ற மற்றும் இரட்டை இணைப்புகளை தவிர்க்கவும், வணிக பயன்பாட்டிற்காக மானிய சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற விரும்பும் நுகர்வோர், பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்வது அக்டோபர் 1-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மொத்த நுகர்வோர்களில் 80.9 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே இந்த சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சரிபார்ப்பை இதுவரை முடிக்காதவர்கள், சிலிண்டர் விநியோகத்தின்போதே விநியோகப் பணியாளரிடம் நேரில் சரிபார்க்கலாம், அல்லது, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ, செயலி மூலமாகவோ பயோமெட்ரிக் சரிபார்ப்பை எளிதாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சரிபார்ப்பை முடிக்காத நுகர்வோர் சமையல் எரிவாயு பெறுவதில் தடை ஏற்படாது என்றும், ஆனால் அவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலையின் அடிப்படையிலேயே சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT