மலப்புரம்,
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா நகர கூட்டுறவு வங்கியின் மூர்க்கநாடு கிளையில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் நவ்பல் (வயது 47). இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்க பிராந்திய தலைவராக உள்ளார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரின் உதவித் தொகையை போலி கையெழுத்திட்டு, மாதந்தோறும் பணத்தை எடுத்து கையாடல் செய்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு கடந்த 10 மாதமாக உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. உதவித்தொகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த அவர், கூட்டுறவு வங்கிக்கு சென்று கேட்டு உள்ளார். அதற்கு வங்கி அதிகாரிகள், உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெண் தனக்கு 10 மாதங்களாக உதவித்தொகை கிடைக்கவில்லை என்று வங்கி உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், கணவரை இழந்த பெண்ணுக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய தலா ரூ.2 ஆயிரத்தை, அவரது கையெழுத்தைபோல நவ்பல் போலி கையெழுத்திட்டு ரூ.20 ஆயிரத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து நவ்பல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரை அறுப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் பெருந்தல் மன்னா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை இழந்த பெண்களுக்கு வங்கி மூலம் உதவித்தொகை வழங்குவதை நிறுத்த அரசு முடிவு செய்தபோது, அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய போராட்டத்தில் நவ்பல் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.