திருவனந்தபுரம்,
கேரளாவில் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்திற்கு பின்னர் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் சிலர் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணனும் சென்றார்.
இந்நிலையில், ஆட்சியர் கோபாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதியானது. துணை கலெக்டர் மற்றும் 20 பணியாளர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல் மந்திரி, அவரது அமைச்சரவை சகாக்களான ஏ.சி. மொய்தீன், கே. சைலஜா, கே.டி. ஜலீல், இ.பி. ஜெயராஜன், கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய 6 மந்திரிகளும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். இதே போன்று முதல் மந்திரி பயணத்தில் உடன் சென்ற கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹேராவும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.