தேசிய செய்திகள்

ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை

ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலபுரகி,

காதல்

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அருகே தேக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா (வயது 23). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது.

தற்கொலை

வெவ்வேறு சாதி மற்றும் சிறுமிக்கு 16 வயது தான் ஆவதால் இந்த காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிவப்பாவும், அந்த சிறுமியும் மனமுடைந்து காணப்பட்டனர்.

இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் சிவப்பாவும், சிறுமியும் தேவன தேகனூர் கிராமத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே சென்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில் ரெயில் ஒன்று வேகமாக வந்தது.

அந்த சமயத்தில் அவர்கள் 2 பேரும் கைகளை பிடித்துக் கொண்டு ரெயில் முன் பாய்ந்தனர். இதில் ரெயிலில் அடிபட்டு அவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக வாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட னர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.