புதுடெல்லி,
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள, கோவேக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில், தற்போது 2 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான முதற்கட்ட ஆய்வக சோதனைகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்வதற்கு நிபுணர் குழுவிடம் அந்நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.
அதனை ஆய்வு செய்த மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிபுணர் குழு, 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ளலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் பரிந்துரை வழங்கியிருந்தது.
இதையடுத்து நிபுணர் குழு வழங்கிய பரிந்துரையை ஏற்று, தற்போது 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்வதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 525 தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு, 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.