வாஷிங்டன்,
அமெரிக்க கோர்ட்டில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோர் மீது தொடரப்பட்ட குற்றவி யல் பத்திர மோசடி வழக்கை அமெரிக்க நீதிபதி நிக்கோலஸ் கராபிஸ் நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளார்.
இந்த வழக்கின் மூலம் தொடரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள், மீண்டும் தாக்கல் செய்ய முடியாத வகையில் முடிவுக்கு வந்துள்ளன.நீதித்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுகளான பத்திரம் மோசடி சதி, மோசடி சதி மற்றும் பத்திரம் மோசடி ஆகிய பிரிவுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்ட மீறல்கள் மற்றும் நீதித் தடையின் கீழ் தொடரப்பட்ட இதர குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடக்கம் முதலே மறுத்து வந்தது. இந்த வழக்கு விசாரணை எந்தவித நீதிமன்ற தீர்ப்போ அல்லது சாட்சியங்கள் ஆய்வோ இன்றி முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையில், அதானி குழுமத்தின் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.நிதிநிலை அறிக்கைகளின்படி, குழுமத்தின் சொத்து மதிப்பு மற்றும் சந்தை மூலதனம் உயர்ந்துள்ளது. பல்வேறு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, அதானி குழுமத்திற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.உண்மை வென்றுவிட்டது.இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கவுதம் அதானி, 'உண்மை வென்றுவிட்டது' என்று கூறியுள்ளார். நீதித்துறை நடைமுறையை மதிப்பதாகவும், இந்த காலகட்டத்தில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கத்தில் நிறுவனம் தொடர்ந்து உறுதி யுடன் செயல்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.