தேசிய செய்திகள்

டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்தும் முன்பு துப்பாக்கியால் சுட்டு கூட்டுப்பயிற்சி பெற்ற குற்றவாளிகள் - பரபரப்பு தகவல்

டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பை ஜூகு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் நடிகர் டைகர் ஷெராப்பின் கார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அவரது டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்ட பூல்சிங், ஹிருத்திக் குமார், ரெகான் அன்சாரி மற்றும் 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் துப்பாக்கியால் சுட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரை போலீசார் கடந்த புதன்கிழமை எஸ்பிளன்டே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 31-ந்தேதி வரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கும்பல் தாக்குதலில் ஈடுபடும் முன் மும்பை அருகில் உள்ள ஒரு பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கூட்டுப்பயிற்சி எடுத்துள்ளனர். இதில் ஒருவர் 2 முறையும், மற்றொருவர் ஒரு முறையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதேபோல தாக்குதல் நடத்திய கும்பல் அந்தேரி பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர். அப்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் குண்டு அறையில் இருந்த படுக்கை மீது பாய்ந்ததும் தெரியவந்தது. கும்பல் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி செய்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT