திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடத்தின் அனைத்து மாதங்களும், அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிகாலை 01.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது முதல், நள்ளிரவு 12 மணிக்கு நடை சாத்தப்படும் வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். தினமும் சராசரியாக 70,000 முதல் 80,000 வரையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பொதுவாக வார நாட்களில் கூட்டம் சற்று குறைவாகவும், வார இறுதி நாட்களில் அதிகரித்தும் காணப்படும்.
இந்தநிலையில், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் ஆகிறது. நேற்று மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2-ல் உள்ள 31 அறைகளிலும், நாராயணகிரியில் உள்ள 9 அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
காத்திருப்பு அறைகளை தாண்டி சிலத்தோரணம் வட்டத்திலிருந்து பாட்டா கங்கம்மா கோவில் வட்டம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று திருப்பதியில் 75,428 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதியில் இன்று அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.