தேசிய செய்திகள்

‘மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும்’ - கீதா கோபிநாத்

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 120 முதல் 140 டாலர் வரை உயரக்கூடும் என கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறுகிய காலத்திற்கு வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். மேலும், மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

“மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் எவ்வாறு முடிவடையும் என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் ஒரு நீடித்த போர் ஏற்படும் அபாயத்தை சந்தைகள் போதுமான அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலை இன்னும் ஒரு மாதம் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 120 முதல் 140 டாலர் வரை உயர்ந்து, நீண்ட காலத்திற்கு அதே நிலையில் நீடிக்கக்கூடும்.

அந்த சூழ்நிலையில், தற்போது 3.1% எனக் கணிக்கப்பட்டுள்ள உலகளாவிய வளர்ச்சி(Global Growth) 2.5% அல்லது 2% ஆக குறையக்கூடும். போர்சூழலை தவிர்க்க விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்றும், நிலைமை ஒப்பீட்டளவில் விரைவாக சீர் செய்யப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.

இந்த போரால் உலகின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விதமாக பாதிக்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, எதிர்கால நிகழ்வுகளின் அடிப்படையில் கொள்கை மாற்றங்களைச் செய்ய வழிவகுக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையைக் கையாள வேண்டும். மாறிவரும் தரவுகளைக் கண்காணிக்கும் அதே வேளையில், குறுகிய காலத்திற்கு வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி நிலையாக வைத்திருக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.