மும்பை,
நடைபாலத்தில் இருந்து 9 மாத குழந்தையை வீசிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் (வயது23). இவரது மனைவி ஆர்த்தி (22). இவர்களுக்கு ஆரவ் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. துணி வியாபாரம் செய்து வரும் ஜாபர் போதைப்பொருளுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் காட்கோபர் ரெயில் நிலையம் அருகில் உள்ள நடைபாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன், மனைவி இடையே வழக்கம்போல மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜாபர் நடைபாலத்தில் இருந்து குழந்தையை தூக்கி கீழே வீசினார்.
இதில் படுகாயமடைந்த குழந்தை வலியால் அலறி துடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் ஆர்த்தி குழந்தையை மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு உடல்நலம் மோசமானதை அடுத்து, குழந்தை மேல்சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடை பாலத்தில் இருந்து குழந்தையை வீசிய கொடூர தந்தை ஜாபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.